டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப் பெறு என்ற வாசகத்துடன் கூடிய பச்சைநிற மாஸ்க் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.