விவசாயிகளின் தண்ணீர் வரி மற்றும் மின்சார கட்டணம் ரத்து செய்யப்படும் என பஞ்சாப் புதிய முதல்வர் திரு சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சராக இருந்த திரு அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பஞ்சாப் முதலமைச்சராக நேற்று அவர் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி, பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ஹரிஷ் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேசமயம் முன்னாள் முதலமைச்சர் திரு அம்ரிந்தர் சிங் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.
முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு சரண்ஜித் சிங் சன்னி மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தில் பஞ்சாப் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து விவசாயிகளின் தண்ணீர் மற்றும் மின் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்தார். முன்னாள் முதலமைச்சர் திரு அம்ரிந்தர் சிங் மக்கள் நலனுக்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டிய அவர், அப்பணிகளை தொடர்ந்து தான் எடுத்துச் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.