இயற்கை விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் அசத்தும் வேளாண் பட்டதாரி இளைஞரை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம் .
புதுச்சேரி அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவர் ஒரு வேளாண் பட்டதாரி வீரப்பனுக்கு சிறுவயது முதலே விவசாயத்தின் மீது இருந்த நாட்டத்தால் படித்து முடித்ததும் நேராக வயலில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார். பட்டம் பெற்று முடித்ததும் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களான காட்டுயானை, பாசுமதி, ராஜபோகம் போன்ற நெல் வகைகளை பயிரிட்டு அமோக விளைச்சலை கண்டார். மேலும் இரண்டு ஏக்கரில் கால்நடை பண்ணை அமைத்து அதில் நாட்டு இன வகை மாடுகளை வளர்த்து, பால் உற்பத்தியிலும் இறைச்சிக்காக நாட்டு ஆடுகளான தலைச்சேரி, சேலம் கருப்பு ஆகிய ஆடு வகைகள் வளர்த்தும், நாட்டுக்கோழி, வாத்து, மீன் பண்ணைகள் அமைத்து இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.
கடந்த ஆறு வருடமாக விவசாயம் மற்றும் பண்ணை தொழிலில் ஈடுபடும் வீரப்பன் அதன் கழிவுகளை விவசாயத்திற்கு உரமாகவும், கோழி வாத்துகளுக்கு உணவாகவும் பயன் படுத்தி வருகிறார். இங்கு விளையும் பயிர், பழம், காய்கறிகள் போன்றவற்றையும் கோழி மற்றும் அதன் முட்டைகளையும் இடைத்தரகர்கள் யாருமின்றி விற்று லாபம் ஈட்டுவது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு இடு பொருளும் வாங்கி பயன்படுத்தாமலும், அதேபோல் இடைத்தரகர் யாருமே இல்லாமல் நேரடி விற்பனை செய்து வருவதால் இந்த பண்ணை மார்க்கெட்டும், இயற்கை விவசாயத்தையும் தொடர்ந்து செய்து லாபம் ஈட்டி வருகிறேன்” என்று தெரிவித்தார். புதுச்சேரி மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் இங்கு வந்து பார்வையிட்டுச் செல்வதாக இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதுடன் இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் மாற வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்றும் வீரப்பன் தெரிவித்துள்ளார்.