வனத்துறையினரை கண்டித்து மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மேகமலை ஊராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலைகிராம மக்கள் வனப்பகுதிகளில் விவசாயம் செய்ய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மேகமலை ஊராட்சியின் 39 மலைகிராம மக்கள் ஒன்று திரண்டு வருசநாடு பேருந்து நிலையம் அருகே உள்ள தேனி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மரியாளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ், வனக்குழு தலைவர் குணசேகரன், மேகமலை ஊராட்சி மன்ற தலைவர் பால் கண்ணன் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு அதிகாரி சங்கரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் நாங்கள் மலைக்கிராமங்களில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றோம். எனவே வனஉரிமை சட்டத்தின்படி மலை கிராம மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், வழக்கம்போல வனப்பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட 98 மலை கிராம பெண்கள் உட்பட மொத்தம் 350 பேரை காவல்துறையினர் கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதற்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வருசநாட்டில் இருந்து தேனி செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யபட்டும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.