தெருவில் விளையாடி கொண்டிருந்த 7 சிறுவர் சிறுமிகளை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் மேலதெருவில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென 3 வெறிநாய்கள் அங்கு ஓடி வந்து சிறுவர்களை கடிக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் அச்சத்தில் ஓடியுள்ளனர். இருப்பினும் அந்த வெறிநாய்கள் சிறுவர் சிறுமிகளை கடித்து குதறியது.
இதில் அதே பகுதியை சேர்ந்த சுகைனா ஆப்ரின்(7). தொகிதா(5) உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் நாய்களை விரட்டிவிட்டு சிறுவர்களை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சியினர் உடனடியாக நாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.