பரந்தூரில் வேளாண் நிலங்களை அழைத்து புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரை ஏற்று இந்திய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதி மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி 3000 ஏக்கர் விளைநிலங்களையும் 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அளித்து விமான நிலையம் அமைக்க முயற்சி செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
அடுத்த 10 வருடத்திற்கு பயன்படும் விதமாக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவசர அவசரமாக புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன வந்தது என்பதை இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும். மேலும் உண்ண உணவு தரும் விளைநிலங்களையும், குடிப்பதற்கு நீர் தரும் நீர் நிலைகளையும், மக்கள் வாழும் வீடுகளையும் அழித்தொழித்து அதன் மீது ஓடு பாதைகளையும், தொழிற்சாலைகளையும், வணிக வளாகங்களையும் அமைப்பதை வளர்ச்சி என அரசு கூறுவதை எப்படி ஏற்க முடியும். மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப சாலைகள் ரயில் பாதைகள் விமான நிலையங்கள் போன்றவற்றை விரிவாக்கம் செய்வது புதிதாக அமைப்பது அவசியம் தான் என்றாலும் அவை பயன்பாடு இல்லாத தரிசு நிலங்களில் மேற்கொள்ள வேண்டும் தவிர விளைநிலங்களையும் வீட்டுமனைகளையும் நீர் நிலைகளையும் அழித்து உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது.
மேலும் கிராமப்புறங்களில் பாமர மக்களிடம் விளைநிலங்களையும் வீடுகளையும் வலிந்து அபகரிக்கும் அரசுகள் மாநகரங்களில் பெரும் செல்வந்தர்களின் வீடுகளையோ, பெரும் முதலாளிகளின் சொத்துக்களையோ அழித்து பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களை அழித்து அதன் மீது விமான நிலையங்களை அமைக்கும் துணிவு இருக்கின்றதா செயற்கையாக உருவாக்கப்பட்ட வணிக வளாகங்களை விட உயிர்கள் வாழ உணவளிக்கும் விளைநிலங்கள் மதிப்பில் குறைந்தவை என்ற முடிவு அரசிற்கு வந்தது எப்படி என்ற கேள்விக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகின்றார்கள். அதனால் பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத விதமாக விளைநிலங்களோ, நீர்நிலைகளைளோ, வீடுகளோ இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.