நடிகை ஸ்ருதிஹாசன் வில்லியாக நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த லாபம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர் ‘என் தந்தை கமல்ஹாசனிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் நகைச்சுவை முக்கியம் என்பதையும் அவரிடம் இருந்து தான் கற்றேன். பலர் என்னை வில்லியாக பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனக்கும் வில்லியாக நடிக்க ஆசையாக இருக்கிறது. நல்ல கதை, கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயமாக வில்லியாக நடிப்பேன்.
எந்த வருடத்தில் வந்த இசை சிறப்பானது என்று என்னிடம் கேட்டால், 70-களில் வந்த இசைதான் சிறப்பானது என சொல்வேன். அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பையும், நல்ல வாய்ப்புகள் வருவதையும் நம்புகிறேன். என் வாழ்க்கையில் தினமும் ஒரு புதிய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கை இப்போது ரொம்ப அழகாக இருக்கிறது. கஷ்டம் வந்தால் கடவுளைப் பிரார்த்திப்பேன், நண்பர்களுடன் பேசுவேன், சிலநேரம் அழுவேன். கண்ணீரில் கஷ்டம் மறைந்துவிடும். நேர்மையாக இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை கற்றுக் கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.