யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காடகநல்லி மலை கிராமத்தில் சித்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்துவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சித்து காடகநல்லி வனப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பெருமடுவு பள்ளம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் சித்து இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது சித்துவின் உடலில் யானை மிதித்ததற்கான அடையாளங்கள் இருந்ததோடு, சிறிது தூரத்தில் யானை பிளிரும் சத்தமும் கேட்டது. இதனால் யானை தாக்கி சித்து இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சித்துவின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.