ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று கேஸ் சிலிண்டர், விமான எரிப்பொருள் ஆகிய பொருட்களின் விலையினை மாற்றி அமைப்பது வழக்கமான ஒன்றாகும். அதன்படி பிப்.. 1ம் தேதி விமான எரிப்பொருள் விலை மாற்றி அமைக்கப்பட்டு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் விலை உயர்ந்து இருக்கிறது. அதாவது புதிய விலை நிலவரங்களின்படி, உள்நாட்டு விமானங்களுக்கான எரிப்பொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூபாய் 86,038.2 ஆக உயர்ந்துள்ளது. இது டெல்லி விலை நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் ரூபாய் 84,505.6 என்ற அளவில் தற்போது விமான எரிப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை ஏற்றம் என்பது 8.5 சதவீத உயர்வாகும். அதாவது 1 கிலோ லிட்டருக்கு ரூபாய் 6,743.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு விமான நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. முன்னதாக கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள சூழலில், விமான எரிப்பொருள் விலையேற்றத்தால் இன்னும் செலவுகள் அதிகரித்து நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக விமானப் பயணங்களுக்கான கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய இக்கட்டான சூழலுக்கு விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இதனிடையில் விமான டிக்கெட்களுக்கான விலையை உயர்த்துவது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் அது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் சார்பாக கூறப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது விமான நிறுவனங்கள் துறைக்கு நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் மாறாக விமான எரிப்பொருள் விலை உயர்த்தப்பட்டு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாகவும் விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.