இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விமான சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
இந்திய விமானப்படையின் 88-வது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில் சிறப்பு கண்காட்சிகள் விமானப்படை வீரர்களின் சாகசங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் உள்ள ஹின்டன் விமானப்படை தளத்தில் வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து நடுவானில் விமானத்திலிருந்து குதித்த பாராசூட் வீரர்கள் அந்தரத்தில் சாகசம் செய்து அசத்தினர். வானத்தில் காற்றை கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்த போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
சமீபத்தில் விமானப்படையில் இணையப்பட்ட ரஃபீல் வகை விமானங்களும் ஹின்டன் படை தளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப்படையின் 88-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் பல்வேறு விமானப்படை தளங்களில் சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. போர் விமானங்கள், நவீன ஹெலிகாப்டர்கள், விமானப்படையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.