வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஓகேனக்கலுக்கு தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் நேற்று காலை 24 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்தது. இதனையடுத்து மாலை 1 வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மெயின் அருவி, சீனிபாலஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்தனர். ஆனால் காவல்துறையினர் மடம் பகுதியிலேயே அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.