Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விதியை மீறி உரம் விற்பனை செய்தால்… “உரிமம் ரத்து”… அதிகாரி எச்சரிக்கை…!!!

உரங்களை விதி மீறி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியார் தொடக்க, வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் யூரியா 1,442 டன் டி.ஏ.பி 897 டன், பொட்டாஷ் 389 டன், காம்பளக்ஸ் 3,802 டன், எஸ். எஸ். பி 159 டன் உரங்கள் இருக்கின்றன.

இந்த மானிய உரங்களை அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்கக்கூடாது. மேலும் விவசாயிகளிடம் ஆதார் கார்டை பெற்று விற்பனை முனைய கருவிகளில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். மேலும் சாகுபடி செய்யப்படுகின்ற பயிருக்கு தேவையான அளவு உரங்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். விற்பனை செய்யப்படுகின்ற உரங்களுக்கு ரசீது கொடுத்து விவசாயிகளின் கையொப்பம் அதில் பெற்று பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

இந்த மானிய உரங்களை விற்கும்போது சில உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்கின்றனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு அதிகம் செலவு ஏற்படும். விவசாயிகள் கேட்கின்ற உரங்களை மட்டுமே கொடுக்க வேண்டும். இதர இடுபொருட்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது.

மேலும் உரங்களின் விலை, எவ்வளவு உரங்கள் இருப்பின் உள்ளது என்ற தகவலை பலகையில் விவசாயிகள் பார்த்துக் கொள்ளும் வகையில் தினமும் எழுதி போட வேண்டும். மேலும் உரம் மூட்டைகளில் அச்சிடப்பட்ட விலைக்கே விற்க வேண்டும் என்றும், பிற மாநிலங்கள், பிற மாவட்ட விவசாயிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் உரங்களைக் கொடுக்க கூடாது என்றார்.

உர கட்டுப்பாட்டு சட்டம் 1985 -க்கு உட்பட்டு விற்க வேண்டும். விதிகளை மீறி விற்கக்கூடாது. அப்படி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு அவர்களின் விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |