தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. 24 மணிநேரமும் சீராக மின் வினியோகம் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல காரணங்களால் நிலக்கரி உற்பத்தி மற்றும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அனல் மின் நிலையங்களில் உள்ள நிலக்கரி ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.இதையடுத்து தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நிலக்கரி கையிருப்பு குறைந்த அளவே இருந்தாலும் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மின் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது, தொழிற்சாலைகள் மின்னிணைப்பு வேண்டுமென்று விண்ணப்பித்தால் தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பித்த மறுநாள் மின் இணைப்பு வழங்கப்படும்.
மேலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு 24 மணி நேரமும் சீராக மின் வினியோகம் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படாது. எதிர்காலத்தில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்து விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.