பிரசித்தி பெற்ற பழனி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவார்கள். குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும். தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் செல்வார்கள். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடுக்கப் பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் பழனியில் அலை மோதுகிறது.
குடும்பத்துடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் கோவில் நிர்வாக பிரசாத ஸ்டால்களில் பஞ்சாமிர்தம் விற்று தீர்ந்தது. மேலும் இதன் காரணமாக பல பக்தர்கள் மலையடி வாரத்தில் உள்ள தனியார் கடைகளில் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கிறார்கள். அதோடு கூடுதலாக பஞ்சாமிர்தத்தை தயாரிக்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.