தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் இறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் அதிகமான இறப்பு எண்ணிக்கையை அரசாங்கம் மறைத்து காட்டுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கூட குற்றம் சாட்டி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல இறப்பு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு இருந்தது.
தமிழகம் முழுவதும் இது வரை 1.80 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 2626 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று பிளாஸ்மா சிகிச்சையைத் தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444. 444 மரணங்களில் ஒரு சிலர் மட்டுமே கொரோணா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் 444 மரணங்கள் சேர்க்கப்படும். ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். வடிவேலன் தலைமையிலான குழுவில் சம்பத், ஜெகதீசன், சுமதி, விஸ்வநாதன், ஹேமாவதி, துரைராஜ், செல்வி, கணேசன், வினோத்குமார் ஆகியோர் கொண்ட குழு விடுபட்ட மரணங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.