Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

” விடுதலை செய்யுங்க ” பாலியல் தொல்லையில் ஆசிரியர் கைது…. மாணவிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும்  12 ஆம்  வகுப்பு  மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு தருவதாக கூறி ஆசிரியர் மீது  பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த காவல்துறையினர் ஆசிரியர்  ராஜ்குமாரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் 12. ஆம வகுப்பு மாணவிகள் சிலர் ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும் என கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளும் இவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவிகளை வெளியேற விடாமல் தடுத்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு உள்ளேயே அமர்ந்து மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  பள்ளிக்கல்வித்துறை குழு, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மதுக்கூர் காவல்துறையினர்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இந்த  வழக்கு குறித்து மறுபரிசீலனை செய்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பின்னரே  மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார்  4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |