கழிப்பறைக்கு பயன்படுத்தும் திரவத்தை குடித்து ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ரெனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய மகன் இருக்கின்றான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா ரெனிசை விட்டு பிரிந்து தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் சரண்யா தனது கணவர் மீது பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணவன் மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது காவல்துறையினர் கைது செய்து விடுவார்களோ என்று ரெனிஸ் அச்சத்தில் இருந்துள்ளார். இதனால் தான் கொண்டு சென்ற கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து ரெனிஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக ரெனிசை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.