தகராறில் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள தம்மண்ணசெட்டி தெருவில் வசித்து வரும் அரவிந்தன் என்பவர் திருப்பூர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி திருமண நிகழ்சிக்கு கலந்து கொள்வதற்காக சென்ற வாலிபர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அரவிந்தனின் குடும்பத்தினர் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரவிந்தனை அவரது நண்பர் வெங்கடேஷ் என்பவர் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து வெங்கடேஷை பிடித்து காவல்துறையினர் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. இந்நிலையில் அரவிந்தன் மற்றும் வெங்கடேஷ் நெருங்கிய நண்பரான நிலையில் அவரது வீட்டிற்கு அரவிந்தன் அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது வெங்கடேசனின் மனைவியிடம் அரவிந்த தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதனால் வெங்கடேசும் அரவிந்தனும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஆத்திரத்தில் வெங்கடேஷ் மற்றும் அவரது தம்பி கிருஷ்ணராஜ் இணைந்து அரவிந்தனை அடித்து கொலை செய்துள்ளனர்.
இதனைதொடர்ந்து அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி பழைய பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசிது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அரவிந்தனின் உடலை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் நண்பரை கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.