தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர மற்ற நாட்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூன்று நாட்களிலும் கோவில்களை வழிபாட்டுக்கு திறக்க கோரி தமிழக பா.ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வாரத்தின் இறுதி நாட்களில் கோவில்களில் அதிகம் கூட்டம் கூடும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதுவும் இந்து மத கோவில்களுக்கு மட்டுமல்ல அனைத்து மத கோவில்களுக்கும் இந்த கட்டுப்பாடு உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நிலை வரும்போது வாரத்தில் ஏழு நாட்களும் கோவில்கள் திறக்கப்படும். இதனை முதலமைச்சரும் தெரிவித்துள்ளார். இப்போதும் கோவில்கள் முழுமையாக அடைக்கப்படவில்லை. மூன்று நாட்கள் மட்டும் தான் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் அந்த நாட்களிலும் கோவிலில் வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. எதுவும் தடங்கல் இல்லாமல் முறைப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.