Categories
அரசியல் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் என இரு பேரூராட்சிகள் மற்றும் 45 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் எம்எல்ஏவாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் உள்ளார். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,43,058 ஆகும். இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. நெல், கரும்பு, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

மேலும் இப்பகுதியில் 130க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை நிலுவையில் உள்ளது. மேலும் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்படும், வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வலையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் கட்டட பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.

இத்தொகுதி எம்எல்ஏவாக இருக்கக் கூடிய நிலோஃபர் கஃபில் தொகுதி நிதியிலிருந்து 10க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியதாகவும், வாணியம்பாடி பெருமாள் பேட்டையில் அரசு ஐஐடி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மேலும் வாணியம்பாடியில் தொழிலாளர் மண்டல அலுவலகம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிறந்த நீர் மேலாண்மைக்கான விருது வாங்கிய மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த இந்த தொகுதியில் தண்ணீரை சேமித்து வைக்க ஒரு தடுப்பணை கூட இல்லை என்பது இத்தொகுதி மக்களின் வேதனை ஆகும். நீண்டநாள் கோரிக்கைகளுடன் வரக்கூடிய சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்கி வாணியம்பாடி தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |