வாட்ஸ்அப்பில் பல அப்டேட்டுகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனிடையில் இந்த பிரபல செயலியின் வாயிலாக சில கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு நம் பணத்தை பறிக்கின்றனர். அதாவது லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர். மேலும் தெரியாதவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோகால் செய்து அந்த அழைப்பை ஆண் எடுத்தால், அப்போது மோசடி கும்பலின் அருகில் நிர்வாணமாக பெண் தோன்றுவதும், அதுவே ஒரு பெண் அழைப்பை எடுத்தால் அதில் ஆண் நிர்வாணமாக தோன்றுவதும் என்பது போன்ற மோசடிகள் நடந்து வருகிறது.
இதுபோல் வரும் வீடியோ அழைப்புகளை நாம் ஏற்கும் போது அதை மோசடி கும்பல் பதிவுசெய்து, பிறகு நம்மை அந்த பதிவை வைத்து மிரட்டி குறிப்பிட்ட தொகையை பறித்து விடுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இது போன்ற மோசடியால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். வாட்ஸ்அப் நிர்வாண வீடியோ அழைப்பு மோசடிக்கு ஆளான பின் மோசடிக்காரர்களிடம் ரூபாய்.1.57 லட்சத்தை இழந்துள்ளார்.
அதன்பின் அவர் தந்திரமாக செயல்பட்டு உடனே சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 என்ற எண்ணுக்கு அழைத்து தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகாரளித்தார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் ரூபாய்.90,140 மற்றும் ரூ.49,000 மதிப்புள்ள 2 பரிவர்த்தனைகளையும் தடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு பணத்தைத் திரும்ப கொடுத்திருக்கின்றனர். ஆகவே அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்கவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.