Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

வாசுதேவநல்லூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. கேரள எல்லையை ஒட்டிய இந்த தொகுதியில் தலையணை அருவியும், கோட்டை மலையாறு உள்ளிட்ட ஆறுகளும் உள்ளன. வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், மதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,40,367 பேர்.

செண்பகவல்லி அணையை சீரமைத்து விளை நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கொடுக்காததால் விவசாயிகள் கரும்புக்கு பதிலாக பிற பயிர்களை சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். சிவகிரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

தாமிரபரணி தண்ணீர் கிடைக்காததால் கிணற்று நீரையே குடிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு கல்லூரியோ, தொழில் நுட்ப பயிற்சிக்கான நிறுவனங்களோ இல்லை என்பதும், வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலை இல்லை என்பதும் பெரும் குறையாகவே உள்ளது. எலுமிச்சையை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவதால் புளியங்குடி எலுமிச்சை சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பதும், வறட்சி காலங்களில் இழப்பீடு தேவை என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |