வாக்காளர்களுக்கு மூக்குத்தியை பரிசாக கொடுத்ததாக தி.மு.க-வினரை கண்டித்து அ.தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அதன் படி குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லசெரி ஊராட்சியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை பரிசாக கொடுப்பதாக தகவல் பரவியதால் அ.தி.மு.க-வினர் அங்கு திரண்டுள்ளனர். இதனையடுத்து வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக குற்றம் சாட்டி அ.தி.மு.க-வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க-வினர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.