தஞ்சையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற 75 வயது முதியவர் ஒருவர் தான் வளர்த்து வரும் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஆபிரகாம் பண்டிதர் நகரில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி சிங்கப்பூரில் ஒருவரும் சென்னையில் ஒருவரும் வசித்து வருகிறார்கள். தனது மகள்கள் இருவரும் திருமணம் ஆகி தன்னை பிரிந்து சென்றதால், மனைவி உயிருடன் இல்லாத நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனியாக இருந்து வந்துள்ளார்.
அவருக்கு துணையாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டாபர்மேன் என்ற நாய் வந்தது. கிருஷ்ணமூர்த்தியின் நண்பர் ஒருவர் இரண்டு மாத குட்டியாக அந்தப் பெண் நாயை அவருக்கு வழங்கியுள்ளார். கிருஷ்ணமூர்த்தி அந்த நாய்க்கு அபிராமி என்ற பெயர் வைத்தார். அவர் செல்லமாக அந்த நாயை அபி என்று அழைப்பார். அந்த நாய்க்கு தற்போது மூன்று வயது நிறைவடைந்து விட்டது. கிருஷ்ணமூர்த்தி மிகவும் செல்லமாக வளர்த்து வந்த அந்த நாய் தற்போது கருவுற்று இருப்பது கால்நடை மருத்துவர் மூலமாக அவருக்கு தெரியவந்தது.
அந்த நாய் கருவுற்று 50 நாட்கள் ஆகிவிட்டது. நாம் நிறைமாத கர்ப்பிணிக்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் பிறந்த வீட்டை சீராக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தன் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று விரும்பினார். இதனையடுத்து பத்திரிகை அச்சடித்த வாட்ஸ்அப் மூலமாக மகள்கள் மற்றும் தனது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கிருஷ்ணமூர்த்தி தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். நேற்று காலை அபிராமி என்ற நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஏராளமான உறவினர்கள் பங்கேற்றனர்.
வீட்டின் அருகே இருக்கின்ற பால விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், கற்கண்டு, மஞ்சள் மற்றும் குங்குமம் போன்றவை தாம்புல தட்டில் வைக்கப்பட்டு சீர்வரிசைகள் ஆக உறவினர்கள் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தடைந்தனர். சீர்வரிசை ஊர்வலம் வீட்டிற்கு வந்தடைந்தவுடன் நாய்க்கு பட்டு சேலை போர்த்தப்பட்டு, மஞ்சள் குங்குமத்தால் திலகமிட்டு வளையல் அணிந்து பூ வைத்து ஆரத்தி எடுத்தனர். இவ்வாறு அந்த வளைகாப்பு நிகழ்ச்சி இனிதாக நடந்து முடிந்தது. இதனை வெற்றிகரமாக செய்து முடித்த கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.