மருத்துவ குணம் நிறைந்த சுறா மீன்கள் கடலில் கிடைத்துள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தற்போது தாளஞ்சுறா மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது பால்சுறா, கடிசுறா, தாளஞ்சுறா , கொம்பஞ்சுறா, என சுறா மீன்களில் பலவகைகள் இருக்கின்றன. இதில் கடிசுறா வகைகள் அளவில் பெரிதாக இருக்கும். இந்நிலையில் கடிசுறா மற்றும் கொம்பஞ்சுறா வகைகள் இந்திய கடல் பகுதியில் கிடைப்பதில்லை. மேலும் பால்சுறா மற்றும் தாழளஞ்சுறா மீன்கள் அதிராம்பட்டினம், கீழத்தோட்டம், ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் கிடைக்கின்றன.
அதிலும் இந்த தாளஞ்சுறா மீன் வகைகளில் அதிக அளவு மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவும், குடல்புண், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த தாளஞ்சுறா மீன்கள் மழை காலத்தில் தான் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும். தற்போது இந்த தாளஞ்சுறா மீன்கள் கடல் பகுதியில் அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் இந்த மீன்களை சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் இந்த மீன்களை வாங்கி செல்கின்றனர்.