கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா மாவு, ரவை போன்றவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
வெயிலின் தாக்கம் அதிகமான காரணத்தினால் இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. அத்துடன் உக்ரைன் போர் என்ற சர்வதேச சிக்கலினால் கோதுமை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் கோதுமை ஏற்றுவதற்கு மத்திய அரசு கடந்த மே மாதம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கோதுமை மாவு, ரவை, மைதா போன்ற கோதுமை சார்ந்த பொருட்களுக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இனிமேல் கோதுமை ஏற்றுமதிக்கு அமைச்சக குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். இது வருகிற 12-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘கோதுமை மாவில் ஏற்றுமதி கொள்கை இன்னும் அப்படியே இருக்கிறது. ஆனால் கோதுமை ஏற்றுமதி தொடர்பான அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவின் பரிந்துரைக்கு உட்பட்டது’ என்று தெரிவித்தது. அதன்படி கோதுமை மாவு, மைதா, ரவை உள்ளிட்ட கோதுமை சார்ந்த பொருட்களுக்கு அமைச்சக குழுவின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாகும். கோதுமை மாவின் தரம் தொடர்பாக தேவையான வழிமுறைகள் தனியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.