மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றின் பரவல் அதிகரிப்பினால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்பின் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் மாவட்டங்களிலுள்ள கொரோனா நிலைமையை சரிபார்த்து அதன்படி பள்ளிகள் திறப்பதற்கு முழு உரிமையும் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் கல்லூரிகளை மீண்டும் திறக்கும் முடிவை மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் உதய் சமந்த் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள கல்லூரிகளை திறந்து மீண்டும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று அமைச்சர் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதன்படி மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் திறப்பதற்கான அனுமதியை நேற்று இரவு மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் அனைத்தும் மாணவர்களுக்கும் முழுமையாக திறக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். மகாராஷ்டிரா கல்லூரிகளை மீண்டும் திறக்கும் முடிவு உள்ளூர் நிர்வாகம் மற்றும் அமைப்புகளிடமே இருக்கிறது என்றும் உதய் சமந்த் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கிடையில் சில நிறுவனங்கள் மீண்டும் நேரடி வகுப்புகளை தொடங்க விரும்பவில்லை என்றால் அவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஆன்லைன் தேர்வுகளைத் தொடருமாறு மகாராஷ்டிரா கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.