2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணிகள் சாம்பியன் ஆனது கிடையாது என்ற வரலாறு தொடர்கிறது.
#டி20 உலக கோப்பை தொடர் தென்னாபிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக இந்த டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரை நடத்தியது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
# இங்கிலாந்தில் 2009 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி குரூப் சுற்றோடு நடையை கட்டியது. பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
# வெஸ்ட் இண்டீஸில் 2010 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் தொடரை நடத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் சுற்றோடு வெளியேறியது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
# இலங்கையில் 2012 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் தொடரை நடத்திய இலங்கை அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் வீழ்ந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
# வங்கதேசத்தில் 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் தொடரை நடத்திய வங்கதேச அணி லீக் சுற்றோடு நடையை கட்டியது. இதில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
# இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதில் தொடரை நடத்திய இந்திய அணி அரையிறுதி வரை சென்று வெளியேறியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.
# 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இணைந்து நடத்தியது. ஆனால் ஐக்கிய அரபு அமீரக அணி தகுதிச்சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் போனது. ஓமன் அணியோ தகுதிச்சுற்றை தாண்டியதில்லை.. இதில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.
அதேபோல இந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா நடத்தி வருகின்றது. ஆனால் ஆஸ்திரேலியா அணியும் தற்போது குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளது. இதன்படி பார்த்தோம் என்றால் இதுவரையில் உலகக்கோப்பையை நடத்தும் அணி கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறு இந்த முறையும் தொடர்ந்து கொண்டே வருகிறது. இது எப்போது மாறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் குரூப்-1 பிரிவிலிருந்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் நவம்பர் 9ஆம் தேதி சிட்னி மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது..