வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதால் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் நுழைந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்பவருக்கும் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. நடராஜன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இதனால் பிரவீனா கணவர் வீட்டில் வசித்து வந்தார். கணவர் வெளியூரில் இருப்பதால் கணவரின் தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பிரவீனா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
இதுப்பற்றி பிரவீனா துணை போலீஸ் சூப்பிரெண்டிடம் பொதுமக்களுடன் சென்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கும் நடராஜன் என்பவருக்கும் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் பொழுது எனது பெற்றோர் 24 பவுன் நகைகள், 3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். இந்த நிலையில் என்னை கூடுதல் வர தட்சணை வாங்கி வருமாறு கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்கின்றார்கள்.
மேலும் என்னை கணவர் வீட்டில் சேர்க்காமல் வீட்டை பூட்டி விட்டு அனைவரும் பக்கத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்கள். இதனால் சென்ற 20 நாட்களாக நான் கணவர் வீட்டு வாசலில் தான் தங்கி இருக்கின்றேன். நான் எனது கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதில் கூறியுள்ளார். இந்த நிலையில் தனது கணவர் குடும்பத்தினர் வீட்டில் வசிக்க மறுப்பதால் ஆத்திரம் அடைந்த பிரவீனா நேற்று முன்தினம் கடப்பாரையால் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.