வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெங்களூரில் வேலைபார்த்து கொண்டிருந்த இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் வசித்து வந்த இவர்களுக்கு 1 வயதில் மகள் உள்ள நிலையில் இரண்டாவதாக சங்கீதா இருந்துள்ளார். இதனால் பாண்டியராஜன் சங்கீதாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து சங்கீதாவிற்கு குழந்தை பெற்ற பிறகு அவரது பெற்றோர் திருப்பி அழைத்து செல்லுமாறு பாண்டியராஜனிடம் கூறியுள்ளனர்.
அதற்கு பாண்டியராஜனின் தந்தை காமராஜ் மற்றும் தாயார் அமராவதி வரதட்சணையாக வளைகாப்பிற்கு போட வேண்டிய 5பவுன் நகை மற்றும் பிறந்த குழந்தைக்கு போட வேண்டிய நகைகளை கொடுத்தால் தான் சங்கீதாவை அழைத்து செல்ல முடியும் என கூறியுள்ளனர். இதுகுறித்து கடந்த 17ஆம் தேதி ஊரில் உள்ள பெரியோர்களின் தலைமையில் பஞ்சாயத்து நடந்துள்ளது. அப்போது பாண்டியராஜன் மற்றும் அவரது பெற்றோர் சங்கீதாவை தாக்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சங்கீதா அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த சங்கீதாவின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில் சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி பாண்டியராஜன், அவரது தந்தை காமராஜை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அமராவதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.