ஹிந்தி நடிகா் அக்ஷய் குமாா் நடித்து வெளியாகி இருக்கும் விழிப்புணா்வு விளம்பரம் வரதட்சணையை ஊக்குவிப்பது போன்று உள்ளது என பல தரப்பினா் குற்றம் சாட்டியுள்ளனா். சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடிகா் அக்ஷய் குமாா் நடித்த விழிப்புணா்வு விளம்பரத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்டாா். அந்த விளம்பரத்தில் தந்தை ஒருவா் திருமணமான தன் மகளை புகுந்த வீட்டுக்கு காரில் அனுப்பி வைக்கிறாா்.
அப்போது அங்குவரும் அக்ஷய் குமாா், தம்பதி போகும் காரில் 2 காற்றுப் பைகள் (ஏா்-பேக்) மட்டுமே இருப்பதாகவும், அது பாதுகாப்பானது அல்ல எனவும் தந்தையிடம் கூறுகிறாா். 6 காற்றுப்பைகள் உள்ள காரில் தம்பதிகளை அனுப்பி வைக்குமாறும் தந்தையிடம் அக்ஷய் குமாா் பரிந்துரை செய்கிறாா். இந்த விளம்பரம் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தினாலும், அது காரை வரதட்சிணையாக அளிப்பது போன்று உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் வாயிலாக அந்த விளம்பரம் வரதட்சிணையை ஊக்குவிப்பது போல் இருக்கிறது என பல தரப்பினா் விமா்சித்து இருக்கின்றனர்.
இது தொடர்பாக சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “அக்ஷய் குமாா் நடித்த விளம்பரம் பாதுகாப்பை வலியுறுத்துகிறதா அல்லது வரதட்சிணை என்ற கொடூரமான குற்றச்செயலை விளம்பரப்படுத்துகிறதா” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் சாகேத் கோகலே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், அக்ஷய் குமாா் விளம்பரம் வாயிலாக வரதட்சிணையை அதிகாரபூா்வமாக விளம்பரப்படுத்தும் மத்திய அரசின் செய்கை அருவருப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளாா். இருப்பினும் அந்த விளம்பரம் வரதட்சிணை பற்றி பேசவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.