கார் வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மின்வாரிய அதிகாரி குழந்தையுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள படூரிலிருக்கும் மின் வாரிய அலுவலகத்தில் ஷர்மிளா(31) என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஜித் பாபு என்ற கணவரும், நயோமிகா(5), யுவந்திகா(1) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் சர்மிளா தனது தம்பி சாம்கணேஷ் மற்றும் 2 குழந்தைகளோடு சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். இந்நிலையில் கொட்டாம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று சென்றது. அந்த மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக சாம்கணேஷ் பிரேக் பிடித்துள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி வயல்வெளியில் பாய்ந்து தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த மூன்று பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யுவந்திகா பரிதாபமாக இறந்துவிட்டார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.