அறியானாவிலிருந்து புதிய வகை மோப்ப நாய் முதுமலைக்கு கொண்டுவரப்பட்டு வனத்துறையினர் பயிற்சியளித்து வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் ,வன விலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.முதுமலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆபர் என்ற மோப்ப நாய் வனப் பணியில் ஈடுபட்டிருந்தது . கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் உடல்நலக்குறைவால் இறந்து விட்ட நிலையில், தற்போது புதிதாக மோப்ப நாய் ஒன்றை பணியில் அமர்த்த அரியானா மாநிலம் பஞ்ச்ககுலா மாவட்டத்தில் உள்ள மோப்ப நாய்களுக்கான பயிற்சி மையத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த டைகர் என்ற புதிய மோப்ப நாயை கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளது.
புதிய டைகர் எனும் மோப்ப நாய்க்கு பயிற்சியாளராக வடிவேலு என்பவர் நியமிக்கப்பட்டு இதற்காக தெப்பக்காடு முகாமில் தனி அறை ஒதுக்கப் பட்டுள்ளது. புதியவகை ஜெர்மன் ஷெப்பர்டு மோப்ப நாய்க்கு ஒன்றரை வயது இருக்கும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். இதுவரை புதிய மோப்ப நாயை ரோந்து பணிக்கு அழைத்துச் செல்லப்படாமல் வன குற்றங்களை கண்டறியவும், சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை கண்டறியும் பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்தவுடன் ரோந்து பணிக்கு ஈடுபடுத்தப்படும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.