தேர் கவிழ்ந்து 2 பேர் பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி இந்த கோவில் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அடுத்து மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர்நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் நின்ற போது எதிர்பாராதவிதமாக தேர் முன்புறமாக கவிழ்ந்தது.
இதில் பாப்பாரப்பட்டி சிவா காலனியைச் சேர்ந்த மனோகரன்(57), சரவணன்(60) உள்ளிட்ட 7 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மனோகரன், சரவணன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 5 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.