சீன நாட்டின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் இறுதியில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது கொரோனா 225க்கும் அதிகமான நாடுகளில் நுழைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழ்நிலையிலும், வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் என உருமாறி வரும் வகைகளால் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 51 கோடியே 90 லட்சத்து 3 ஆயிரத்து 755 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் தப்பவில்லை. இருப்பினும் ஒருசில நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. வட கொரியாவில் கொரோனா தொற்று ஏற்படவேயில்லை என அரசு தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில் அந்நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நபர் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
அதன்பின் கொரோனாவை ஒழிப்போம் என உறுதி பூண்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தேசிய அளவில் அவசர கால நிலையை பிறப்பித்துள்ளார். இதேபோல் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தப்படுகிறது என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வட கொரியாவில் தொற்று பாதிப்பு இல்லை என இதுவரையிலும் தகவல் வெளிவந்த சூழ்நிலையில், தற்போது ஒருவருக்கு பாதிப்பு உறுதியானதை அடுத்து நாடு முழுவதும் அதிபர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருப்பது உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது.