வடகிழக்கு பருவமழைப்பொழிவை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 24 மணிநேரத்தில் 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரி மழைப்பொழிவு 22.62 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது. ஐந்து இடங்களில் மிக கன மழையும் , 41 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. 2015 முதல் 2021 வரை பெய்த மழை அளவை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது 2021 ஆம் ஆண்டு தான் அதிக மழை பெய்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, கடந்த 1918 மற்றும் 1985 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 970 மி.மீட்டரும், 2005ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், 1010 மி.மீட்டரும், 2015 ஆம் ஆண்டு 1050 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து ஆகியவை கணக்கிடப்பட்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஐந்து நீர்த்தேக்கங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள இதர அணைகளிலிருந்து முன்னறிவிப்பு அளித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் மழை பொழிவை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.