தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி வல்லவன் மற்றும் மன்மதன் போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீப காலமாகவே சிம்புவின் படங்கள் எதுவும் சரிவர ஓடாததால் சிம்பு இனி சினிமா உலகில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று பலர் கூறினர். ஆனால் அதை யெல்லாம் பொய் என்று நிரூபிக்கும் விதத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டு பழைய சிம்புவாக மாநாடு திரைப்படத்தில் மாபெரும் கம்பேக் கொடுத்தார்.
இந்த படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி நடை போடுகிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் நடிகர் சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றினை பரிசாக கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் சிம்புவுக்கு கார் பரிசளித்தது போன்று இயக்குனர் கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாக கொடுத்தார்.