தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், நாளை புயலாக மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும், 10ம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது புயலாக உருவாகும் பட்சத்தில் அதற்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டப்படும். இந்த நிகழ்வு காரணமாகவும், வெப்பச் சலனத்தின் காரணமாகவும் தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் பல்வேறு பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.