பொதுவாகவே அனைவருமே ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை கூட வைத்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகள் ஆன்லைனில் வந்து விட்டதால் அனைத்துமே சுலபமாக மாறிவிட்டது. இருப்பினும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட கட்டணம் வங்கியில் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது வங்கி நிர்ணயித்த வரம்பை மீறி பண பரிவர்த்தனை செய்தால் அதற்காக 20 முதல் 100 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதன்பின் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் வங்கி நிர்ணயித்த தொகை இருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகை கூட இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
இதனையடுத்து காசோலை மூலம் ஒரு லட்ச ரூபாய் வரை மற்றும் பண பரிவர்த்தனை செய்தால் அதற்கு கட்டணம் கிடையாது. ஒருவேளை ஒரு லட்ச ரூபாயை தாண்டினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோன்று ஏடிஎம் மிஷின்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் 20 முதல் 50 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகு வங்கியில் இருந்து நம்முடைய செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளுக்கு 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதை தொடர்ந்து ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டாலும், புதுப்பிக்க வேண்டி இருந்தாலும் 50 முதல் 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டாலும், சில வங்கிகள் ஒரு ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.