ஆந்திராவில் பன்றி வியாபாரி ஒருவரின் 5 லட்சம் பணத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா என்ற மாவட்டத்தில் மயிலாபுரம் பகுதியில் பிஜிலி ஜமாலயா என்ற பன்றி வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வங்கி கணக்கு எதுவும் கிடையாது. அதனால் தான் பன்றி விற்பனை செய்யும் பணத்தை தன் மனைவியிடம் கொடுத்து பானையில் போட்டு வைக்க சொல்லியுள்ளார். தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே அவர்களின் மிகப்பெரிய கனவு. அதற்காக 5 லட்சம் ரூபாய்வரை சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் பானையில் போட்டு வைத்த பணம் முழுவதையும் கரையான் அரித்து விட்டது. அதனால் 5,00,200 ரூபாய் நோட்டுகள் கரையானால் அழிக்கப்பட்டு யாருக்கும் பயனில்லாமல் போனது. இதனால் வருத்தமடைந்த அந்த தம்பதி அந்தப் பணம் முழுவதையும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை களுக்கு அள்ளிக் கொடுத்தனர்.
குழந்தைகளின் கையில் அந்தப் பணம் விளையாட்டு பொருளாக மாறியது. அதனைக் கண்டு அக்கம்பக்கத்தினர் விசாரித்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. படிப்பறிவு இல்லாததால் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவர்களின் 5 லட்சம் ரூபாய் பணம் நாசமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது