இந்தியாவில் வங்கி விதிமுறைகள் சட்டத்தை மீறும் வங்கிகள் மீது மத்திய அரசு வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு விதிமுறைகளை மீறும் வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்து அபராதம் விதிப்பது மற்றும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நெருக்கடியான சூழலில் இயங்கி வரும் லக்னோ அர்பன் சகாஹரி கூட்டுறவு வங்கி மற்றும் சிதாபூர் சஹகாரிவங்கி ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது இந்த வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி லக்னோ அர்பன் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் இனி முப்பதாயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். சிதப்பூர் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் 50000 வரை பணம் எடுக்க முடியும் என்றும் அதனை தாண்டி பணமெடுக்க முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த வங்கியில் பணம் போடவும் கடன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறாமல் இந்த வங்கி இனி யாருக்கும் கடன் கொடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் முதலீடு செய்யவும் முடியாது. ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்பதால் இது போன்ற வங்கிகளில் பணம் போட்டவர்கள் பயப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.