சென்னை ஐகோர்ட் வக்கீல் வெட்டிக் கொல்ல முயன்ற 6 பேர் சேர்ந்த கும்பலை எண்ணூர் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஹரிகுமார்(37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட துணை அமைப்பாளராக தி.மு.க வக்கீல் பிரிவில் இருக்கிறார். இந்நிலையில் ஹரிகுமார் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூரில் இருந்து காரில் வீட்டிற்கு சென்றபோது எர்ணாவூர் கன்னீலால் லே- அவுட் அருகே வைத்து 3 மோட்டார் வாகனத்தில் வந்த 6 பேர் வழிமறித்து கற்களை எடுத்து வீசி உள்ளனர்.
இதனால் பயத்தில் ஹரிகுமார் காரிலிருந்து இறங்கி வந்த போது, அந்த கும்பல்கள் அவரை வெட்டி விட்டு தப்பித்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஹரிகுமார் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துள்ளார். இதுகுறித்து வக்கீல் ஹரிகுமாரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது கஞ்சா விற்பதை போலீசுக்கு காட்டிக் கொடுத்ததால் என்னை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் எண்ணூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து வக்கீலை வெட்டிக் கொல்ல முயன்ற 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். வக்கீல் மீது நடந்த கொலை முயற்சி சம்பவத்தினால் நேற்று காலை திருவொற்றியூர் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.