தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சினிமா திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா 2003-ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற மலையாளப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். 2005-ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் காலடி வைத்தார். அதன்பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.
நயன்தாரா சினிமா வாழ்க்கையை 2010க்கு முன்பு, பின்பு என இரண்டாகப் பிரிக்கலாம். 2012 இல் தனது 2ஆவது இன்னிங்சை தொடங்கிய நயன்தாரா, தொடர்ச்சியான வெற்றி படங்களை தந்து லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை பெற்றார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சென்னை போயஸ் கார்டனில் வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போயஸ் கார்டனில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 4 படுக்கையறைகள் கொண்ட 2 வீடுகளை அவர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
நல்ல நாள் பார்த்து விரைவில் இந்த புதிய வீட்டில் நயன்தாரா குடியேற இருப்பதாகவும் தெரிகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், புதிய வீட்டை வாங்கியுள்ளார் நயன்தாரா. சென்னையின் முக்கியமான இடங்களில் ஒன்றான போயஸ் கார்டனில் வீடு வாங்குவது என்பது பலரின் கனவாக உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோரின் வீடுகளும் போயஸ் கார்டனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.