மின் கம்பி உரசியதால் வைக்கோலுடன் சேர்ந்து லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏலாக்குறிச்சியில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வி. கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரிய திருகொணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது தாழ்வாக சென்ற மின்கம்பிகள் வைக்கோல் மீது உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் பார்த்திபன் என்பவர் மினி லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் தீ வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.