பெய்ரூட் வெடி விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையில் செவிலியர் ஒருவர் மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
லெபனான் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தற்போது வரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் காயமடைந்திருக்கின்றனர். துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அச்சத்தில் மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஒருவர் அவரது கையில் மூன்று பச்சிலம் குழந்தைகளை ஏந்தி நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உள்ளூர் புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் உலக நாடுகளில் பரவி வருகிறது. மருத்துவமனை 80 சதவீதம் முழுமையாக சேதம் அடைந்துள்ள நிலையில், அந்த செவிலியர் ஒரு கையில் கைப்பேசியை ஏந்தியவாறு, மற்றொரு கையில் குழந்தைகளுடன் அவசர உதவிக்காக அழைத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு பக்கத்தில் பலர் ரத்த காயங்களுடன் கிடக்கின்ற நிலையில், மிகுந்த மன உறுதியுடன் செவிலியர் நிற்கும் காட்சி உலகம் முழுவதிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.