நடிகர் சிரஞ்சீவி லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் ,இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி இந்த படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு லூசிபர் கதையில் சில மாற்றங்கள் செய்யுமாறு மோகன் ராஜாவிடம் சொல்லியிருந்தார். ஆனால் மோகன் ராஜா செய்த மாற்றங்கள் திருப்தியாக இல்லாததால் சிரஞ்சீவி இந்த படத்தை கைவிட முடிவு செய்துள்ளாராம். தற்போது நடிகர் ராம் சரண் இந்த படத்தின் உரிமையை வேறு தயாரிப்பாளருக்கு விற்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.