லாரி டிரைவரை கடத்திச் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் நாமக்கல்லில் இருக்கும் லாரி புக்கிங் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவர் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்றபோது சென்ற 2018-ம் வருடம் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று இரவு அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டயர் வெடித்தது. இதனால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றார். பின் வேறொரு டிரைவரிடம் உரிமையாளர் டயருடன் அனுப்பி வைத்தார்.
ஆனால் அவர் அங்கு சென்று பார்த்தபோது லாரி மட்டும் இருந்திருக்கின்றது. டிரைவரை காணவில்லை. இதனால் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பின் போலீசார் தேடியதில் அங்கு அருகே இருக்கும் காட்டு பகுதியில் குமரேசன் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சங்கர், தீனதயாளன் மற்றும் 15 வயது சிறுவன் உள்ளிட்டோர் குமரேசனை கொலை செய்வது தெரிய வந்தது.
குமரேசன் தனது உரிமையாளரிடம் தகவல் கொடுத்துவிட்டு அருகில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு நடந்து வந்திருக்கின்றார். அப்போது லாரி நிற்கும் இடத்திற்கு செல்ல மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் லிப்ட் கேட்டிருக்கின்றார். அவர்களும் லிப்ட் கொடுக்கின்றேன் என்ற பேரில் குமரேசனை கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து அவரிடம் பணம் கேட்டிருக்கின்றார்கள். அவர் சத்தம் போட்டதால் அவர்கள் இரும்பு கம்பியால் குமரேசனை தலை உள்ளிட்ட இடங்களில் அடித்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த செல்போன், ரூபாய் 1500 உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இவ்வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சங்கர் மற்றும் தீனதயாளன் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் வழிப்பறிக் குற்றத்திற்கு தலா 3 வருட சிறை தண்டனையும் ஆயிரம் அபராதமும், ஆழ்கடத்தால் குற்றத்திற்கு 3 வருட சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய 15 வயது சிறுவன் இளம் சிறார் என்பதால் தனியாக வழக்கு நடந்து வருகின்றது.