நாடு முழுவதும் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர்கள் 20 பேருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருதுகளை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், என்னை போன்றவர்கள் இந்த மேடையில் நிற்க ஆசிரியர்கள் தான் காரணம். வீட்டில் எங்களுக்கு கிடைத்த அனுபவம், பயிற்சி மிகக் குறைவு. முழுமையாக ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். எனவே ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு என்றுமே நன்றி சொல்வது தவறு கிடையாது மாணவர்களின் மனதையும், ஆசிரியர்களின் மனதையும் நன்கு அறிவேன். ராதாகிருஷ்ணன் ஆசிரியராக எவ்வாறு மதிக்கப்பட்டார் என்பதை உலகமே உணர்ந்துள்ளது. இன்றைய மாணவர்களை கையாளுவது சிரமமான காரியம். பெற்றோர்கள் சிலர் ஆசிரியர்களை குறைகூறி வந்தார்கள்.
அதன்பிறகு இரண்டு ஆண்டு கொரோனா காலத்தில் குழந்தைகளை பெற்றோர் கவனித்தனர். அப்போதுதான் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எப்படி தான் சமாளிக்கிறார்கள் என்று வியந்து போனார்கள். குழந்தைகளை கையாளுவது மிகப் பெரும் கலை. அதற்கு மிகவும் பொறுமை வேண்டும். குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரவேண்டும். அதுமட்டுமில்லாமல் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பள்ளிக்கு வர வேண்டும் என்ற மனநிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அதனை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கடைசி பெஞ்ச் மாணவர்களை விட்டு விடாமல் அவர்களுக்கு வாய்ப்புகள் அளித்து அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு தானாகவே முதல் வரிசைக்கு தங்களை மாற்றிக் கொள்வார்கள். மேலும் இணையதளங்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுக்கும் மாணவர்களை ஈர்க்கின்றன. அந்த தொந்தரவுகளில் இருந்து அவர்கள் வெளிவர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.