கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் பெரியாப்பிள்ளை. இவர் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கும் முதியோர் , விதவை உதவித்தொகை பெற்றுத்தரவும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார்.
இதனால் எடுத்தவாய்நத்தம் கிராம மக்கள் லஞ்ச ஒழிப்பு மற்றும் நுகர்வோர் பேரவையின் மாநிலத் தலைவரான ராமநாத அடிகளார் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியாப்பிள்ளையை பணிநீக்கம் செய்யக் கோரியும் அவர் வாங்கிய லஞ்சப் பணத்தை திரும்ப வழங்கக்கோரியும் பொதுமக்கள் பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.