பழனி TO கொடைக்கானல் மலைகளுக்கு இடையில் ரோப்காா் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி கொடைக்கானலில் வெளிநாட்டுப் பொறியாளா்கள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய- மாநில அரசுகள் திட்டமிட்டபடி அனைத்தும் மிகச்சரியான முறையில் நடந்து முடிந்தால், கொடைக்கானல் முதல் பழனி வரை போக்குவரத்து நேரம் 3 மணி நேரத்தில் இருந்து ரோப் காரில் வெறும் 40 நிமிடங்களில் பயணிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும். பழனி -கொடைக்கானல் வரையிலும் சுமாா் 12 கி.மீ தொலைவுக்கு ரோப்காா் நிறுவுவது பற்றி மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், தொழில் அதிபா்கள் வரவேற்புத் தெரிவித்து இருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்விரு மலைகளையும் ரோப்கார் வாயிலாக இணைக்கும் திட்டம் ரூபாய்.500 கோடியில் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை ஆஸ்திரியா நாட்டை சோ்ந்த தனியாா் ரோப்வே நிறுவனப் பொறியாளா்கள் மாா்க்ஸ், யாா்க்ஸ் போன்றோர் பழனி மலைக் கோவிலில் பக்தா்கள் பயன்பாட்டிலுள்ள ரோப் காா் சேவையைப் பாா்வையிட்டனா். இந்த குழுவினா் நேற்று கொடைக்கானல் வந்தனா். இங்கு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள குறிஞ்சி ஆண்டவா் கோவில் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் வில்பட்டி ஊராட்சி புலியூா் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுவாகவே பழனி மலைக்கு வருபவர்கள் கொடைக்கானலுக்கும், அதேபோன்று கொடைக்கானலுக்கு வருபவர்கள் பழனிமலைக்கும் சென்று வருவது வழக்கமாகும்.
சாலை வழியாகச் சென்றால் 64 கி.மீ தொலைவில் இருக்கிறது. இதற்கு சுமார் 3 மணிநேரப் பயணமாகும். வழியில் பெரும்பாலான கொண்டைஊசி வளைவுகளும் இருக்கிறது. இப்பகுதிகளை இணைக்க ரோப்கார் சேவை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தியிருக்கும் பொறியாளர்கள் இன்னும் 6 மாதங்களில் தங்களது அறிக்கையை தாக்கல் செய்வர். அவ்வாறு அறிக்கை கிடைத்ததும் வான்வழி ஆய்வு மேற்கொண்டு, பின் வனத்துறை அனுமதி கோரப்படும். அதனை தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அடுத்த 3 வருடங்களுக்குள் ரோப்கார் சேவை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி TO கொடைக்கானல் இடையில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் ஒரு நிறுத்தமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமின்றி 2 நிறுத்தங்களும் தேர்வு செய்யப்பட இருக்கிறது. பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெறும் 40 நிமிட பயணத்தில் இயற்கைக் காட்சியையும், கோயிலையும் வந்தடைய முடியும். கொடைக்கானல்TO பழனி உட்பட 7 இடங்களில் புதியதாக ரோப்கார் சேவையைத் துவங்க மத்திய அரசானது திட்டமிட்டு, அதற்கான பணிகளை செய்து வருகிறது. இத்திட்டங்கள் மத்திய -மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, அருணாசலம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ரோப் கார் திட்டங்கள் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியது. தமிழகத்தில் பழனி மலைக்கோவில் முதல் கொடைக்கானல் மலைத் தொடர்ச்சியின் மேற்குப்பகுதி வரை சுமார் 12 கி.மீ தொலைவுக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசின் கைவசமுள்ள ரோப் கார் திட்டங்களில் இது தான் மிக நீண்டதூர ரோப் கார் திட்டமாக இருக்கும். இவற்றிற்கு அடுத்த படியாக கர்நாடகத்தில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் சேவை அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.